Thursday, April 30, 2015

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆசியும் , அருளும் ...

என் தோழி ஒருவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் தீவிர பக்தர் ..
தினம் ராமகிருஷ்ண மடம் செல்வது , வழிபடுபது , தியானம் ,பஜனை என ராமகிருஷ்ணரின் பக்தியில் கலந்து , கரைந்து , உருகுபவர் ..

என்னிடமும் அடிக்கடி  ராமகிருஷ்ண மடம் செல் , ராமகிருஷ்ணரை வழிபடு , அவர் சிந்தனைகளை , உபதேசங்களை மனதில் நிறுத்து , மனம் அலைபாய்வது ,கன்னத்தில் முத்தமிடுவது , எல்லாம் ஒரு முகப்படும் , சங்கடமான உன் நேரங்கள் சந்தோசமாக மாறும் , சந்தோசமான நேரங்களின் நிதானம் வசப்படும் , மனோபலம் கிட்டும் , எதையும் தாங்கும் இதயஉறுதி , ஆன்ம பலம் எல்லாம் கட்டுக்குள் வரும்  என்றெல்லாம் எவ்வளவோ சொல்லியும், போனதே இல்லை ,  போவதை நான் தள்ளிபோட்டுகொண்டேயிருந்தேன் ,
மயிலாப்பூரில் இருந்தாலும் , வீட்டிலுருந்து ராமகிருஷ்ண மடம் நடக்கும் தூரம் தான் என்றாலும் , அந்த வழியே அடிக்கடி  போனாலும், உள்ளே  போவது இல்லை ,
ஒரு வேளை ராமகிருஷ்ணர் என்னை  பார்க்க விருப்பபடவில்லையோ , ஏன்   அவரை பார்ப்பதற்கு  இன்னும் appointment தரவில்லை என ,போகாததற்கு காரணங்களை வழக்கம் போல அவரை  பார்க்கும் போதெல்லாம் சொல்லி வந்தேன் ..
சில நாட்கள் முன்பு பெய்த மழையில் நனைந்து , கடுமையான ஜலதோஷம் , ஜீரம் என படுக்கையில் நான்கு நாட்கள்   , பிரட்  , oats கஞ்சி தவிர ஏதும் சாப்பிட முடியாமல்,வெளியே எங்கும் போகாமல் வீட்டிலே இருந்த போது flash அடித்தது ,

இன்று ஏன் ராமகிருஷ்ண மடம் போக கூடாது  ...
பார்க்கிங்  செய்ய இடம் இல்லாத அளவு கூட்டம்,
உள்ளே நுழைய அத்தனை பக்தி வழியும் , கருணை முகங்கள் , ராமகிருஷ்ண மடம் வெளியே  காத்திருந்தது , ராமகிருஷ்ண மடம் உள்ளே பஜனை நடந்து கொண்டு இருந்தது  உள்ளே கூட்டு பஜனை பிரார்த்தனை போல பாடிக்கொண்டிருந்தார்கள்.
 உள்ளே அந்த தியான ஹால் முழுக்க இன்னும் நிறைய அனுபவ பக்தி , அனுபவ கருணை வழியும் பக்தி முகங்கள்,  எவ்வளவு கூட்டம் , எத்தனை பக்தி , என வியக்க வைத்தது , வெளியே காத்திருந்த பக்தி முகங்களுக்கு உள்ளே இடம் இல்லாததால் வெளியே இருந்து பிரார்த்திகிரார்களோ என எண்ணியபடி  மடத்தை சுற்றி நடந்து வந்தேன் ,
ஒரு சிவப்பு குல்லாய் போட்டிருந்த படி , தன் வெள்ளை வேட்டி சட்டை நண்பவரிடம் பேசி கொண்டிருந்த நபர் என்னை வித்தியாசமாக பார்த்தார் , நம் முகத்தில் இன்னும் உண்மையான பக்தி குடியேறவில்லையோ, அதான் சந்தேகமாக பார்க்கிறாரோ  என குழம்பியபடி அவர் கண்களை தவிர்த்து நடந்து கொண்டிருந்தேன் .
கோவில் என்றால் சுத்தம் என்பார்களே ராமகிருஷ்ண மடம் பரிசுத்தம் , படுசுத்தம், காலை தரையில் அழுத்தி தேய்த்தாலும் ஒரு தூசியை பார்க்க முடியவில்லை  , எதை வைத்து எப்படி தான் சுத்தம் செய்கிறார்களோ அவ்வளவு சுத்தமான தரை ..
அதே வளாகத்தில் இருக்கும் பழைய ராமகிருஷ்ண மடம் சென்று ஆளுயர சாரதா தேவியை வணங்கி , மாடியில் இருக்கும் ராமகிருஷ்ணர் , விவேகானந்தர் முன் நின்று எல்லாரையும் போல் விழுந்து வணங்கி , இரண்டு நிமிஷம் இன்ஸ்டன்ட் தியானம் செய்து , புதிய ராமகிருஷ்ண மடம் வந்தபோது , பஜனை ஒலிகள் முடிந்து இருந்தது , ஆனால்  கூட்டம் கொஞ்சம் எதையோ எதிர்பார்த்து பரபரப்பாகி கொண்டு இருந்தது .
எல்லோரும் ஒரு திசை நோக்கி திரண்டு கொண்டிருந்தார்கள் ,
அங்கே மடத்து ஊழியர்கள் இரண்டு பெரிய ட்ராலிகளில் பெரிய ,  பெரிய நான்கைந்து அண்டாக்களோடு வந்து அண்டாக்களை கைபிடிதுணி கொண்டு இறக்கி வைத்தார்கள் , காத்திருந்த  கூட்டம் ஒழுங்கான வரிசையமைத்து கட்டுப்பாடாக முன்னேறி கொண்டிருந்தது ,
அங்கே தாமரை இலை தொன்னையில் சுட சுட சாம்பார் சாதம் கொடுக்க ஆரம்பித்தார்கள் ,
அந்த சிவப்பு குல்லாய் காரர் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தார் , அவர் என்னை முறைப்பது போல தெரிந்தது ,
நான் விலகி தியான ஹால் உள்ளே சென்று ஆளுயர ராமகிருஷ்ணரை மனதில் இருத்தி கண்களை மூடியபோதுகூட்டம் சாம்பார் சாதம் ,நீண்டவரிசை நினைவில்  வந்து வரிசையில் நிற்கும் போது , விரல்களை ஊதி ஊதி தின்று கொண்டிருந்த சிவப்பு குல்லாய்காரர் , கையை பேப்பரில் துடைத்தபடி மறுபடியும் என் பின்னால் நின்றார் ,

என்ன இது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இரண்டாம் முறை  வாங்க வேறுவரிசையில்வந்து ிநிற்கிறாரே  என நினைத்தபடி வரிசையில் முன்னேறி , சூடும் , நெய்யும் மணக்கும் அந்த சாம்பார் சாதத்தை வாங்கி வந்து விரலால் கிளறி , வாயால் ஊதி ஒரு திவலை சாப்பிட்ட போது தான் உண்மை புரிந்தது .. ஆஹா என்ன தெய்வீக ருசி , இத்தனை ருசியான சாம்பார் சாதம் இதுவரை சாப்பிடதே இல்லையே , தின்ன , தின்ன நாக்கில் நீர் ஊறியது , முள்ளங்கி , மாங்காய் , கேரட் , உருளை , பீன்ஸ் , முருங்கை என எல்லா காய்கறிகளும் கூட்டணி அமைத்து அளவான புளிசாறு கலந்து அத்தனை ருசி .. இரண்டு நிமிடத்தில் ருசி தீர்ந்து , சாம்பார் சாதம் தீர்ந்து விட்டது ..
அப்போது தான் உணர்ந்தேன் நான் என்னையும் அறியாமல்
கையை துடைத்து கொண்டு மறுபடியும்  வரிசையில் நிற்கிறேன் , எனக்கு முன்னே சிவப்பு குல்லாய்காரர் மூன்றாவது முறையாக நிற்கிறார்
இத்தனை ருசிமிக்க சாம்பார் சாதத்துக்கு முப்பதாவது முறையாக நின்றாலும் தவறில்லை என்ற உண்மை புரிந்தபோது அவரை பார்த்து புன்னகைத்தேன் அவரும் ஒரு அழகான நட்பு பாராட்டும் புன்னகை வீசினார் .
இரண்டாவது கப் உள்ளே போய் கொண்டிருந்தபோதே கூடிய  பக்திமுகங்கள் கண்களில் தெரிந்தது ஒரு பரவசம் .
மனஉறுதி கிட்டும் , ஆன்ம பலன்  கிட்டும் என்றெல்லாம் சொன்ன தோழி இத்தனை அருமையான சாம்பார் சாதம் கிடைக்கும் என சொல்லவில்லையே என வருத்தப்பட்டு கொண்டிருந்தபோது சிவப்பு குல்லாய்காரர் என்னை அடுத்த ரவுண்டுக்கு அழைத்தார் ,
எனக்கு ராமகிருஷ்ணரின் அருள் ஆசி கிடைத்து விட்டதாய் உணர்ந்து அவருடன் வரிசையில் நிற்க ஆரம்பித்தேன் ...


பின் குறிப்பு : 
சிவப்பு குல்லாய்காரர் சொன்னது :
பிரதி ஞாயிற்று கிழமை இரவு பஜனை நேரம் ஏழு மணி முதல் எட்டு வரை , எட்டு மணிக்கு பின் பிரசாதம் விநியோகம் எட்டு முப்பதுக்குள் முடிந்து விடும் ,
 , மற்ற நாட்களில் வெறும் கல்கண்டு மட்டும் தானாம் .
சாம்பார் சாதம் தவிர , வெஜிடபிள் பிரியாணி , தயிர் , மிளகு சாதம் ஒவ்வொன்றும் அதன் அளவில் தனிசுவை கொண்டதாம் , அவர் இரண்டு வருட அனுபவத்தில் சொன்னது .
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றி அவரிடம் கேட்ட போது அவர் சாமியா , இல்லை தம்பி அவர் குரு ,  மகான், ஆசான்  வாழக்கை தத்துவங்கள் சொன்னவரு இவுங்க அவரையும் சாமி மாதிரி கும்புடுறாங்களே என வருத்தபட்டுகொண்டார்