Monday, April 26, 2021

முத்தம்

 உன் மீதான

 என் அன்பு, 

என் பிரியங்கள் , 

மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .

 நீ உதடு அழுத்தி கொடுத்த 

ஒரு முழு முத்தம்

என், எண்ணங்களை சுவடு தெரியாமல் அடித்து நொறுக்கியது

முத்தம்

 நீ விரும்பும் பெண்ணிடம் , 

அவள் விரும்பி கொடுக்கும் ஒரே ஒரு முத்தம் ,

வாங்கி விட உன்னால் முடியுமென்றால்

 நீ ஆசிர்வதிக்கபட்டவன்

அன்பு

 அன்பு உன்னை என்றும் முட்டாளாக்காது  ..

அன்பு உன்னை பைத்தியமாக மட்டும் தான் மாற்றும் ..

மன்னிப்பா ? தண்டனையா ??

 நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் .


நீ உடன் இருந்த நிறைய நேரங்களில் உன்னிடம் முழுதாய் உடன் இல்லாமல் போனதற்காக ...

இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போகலாம் என நீ நினைத்த போது,
இல்லை இல்லை சீக்கிரம் கிளம்பலாம் என அவசரப்படுத்தியதற்காக ...

உன் அனுமதி பெறும் முன்னே அவசரப்பட்ட
அந்தரங்க நேரங்களுக்காக ....

உன்னை ஏன் என்றே தெரியாமல் காக்க வைத்ததற்காக ...

நானே உன்னிடம் கேள்வி கேட்டு , உன் பதிலையும் நானே சொன்ன முட்டாள்தனத்துக்காக....

நான் உன்னை விரும்பியதை உன்னிடம் சொல்லாமல்  நாட்களை வீனாக்கியதற்காக.....

உன் மேல் அக்கறை கொள்கிறேன் என்று உன்னை யாருக்கோ விட்டு கொடுக்க நினைத்ததற்காக .....

இன்னும் இது போல் ஒரு நூறு ...

உனக்கு இது தான் சரியென நானாக நினைத்து கொண்ட என் அத்தனை தவறுகளுக்கும்

நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் ..

நீ என்னை எப்படி மன்னிக்க வேண்டும், அல்லது எப்படி தண்டிக்க வேண்டும்  என்பதை உன் முடிவுக்கு மனதார விடுகிறேன் ...

Thursday, April 30, 2015

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆசியும் , அருளும் ...

என் தோழி ஒருவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் தீவிர பக்தர் ..
தினம் ராமகிருஷ்ண மடம் செல்வது , வழிபடுபது , தியானம் ,பஜனை என ராமகிருஷ்ணரின் பக்தியில் கலந்து , கரைந்து , உருகுபவர் ..

என்னிடமும் அடிக்கடி  ராமகிருஷ்ண மடம் செல் , ராமகிருஷ்ணரை வழிபடு , அவர் சிந்தனைகளை , உபதேசங்களை மனதில் நிறுத்து , மனம் அலைபாய்வது ,கன்னத்தில் முத்தமிடுவது , எல்லாம் ஒரு முகப்படும் , சங்கடமான உன் நேரங்கள் சந்தோசமாக மாறும் , சந்தோசமான நேரங்களின் நிதானம் வசப்படும் , மனோபலம் கிட்டும் , எதையும் தாங்கும் இதயஉறுதி , ஆன்ம பலம் எல்லாம் கட்டுக்குள் வரும்  என்றெல்லாம் எவ்வளவோ சொல்லியும், போனதே இல்லை ,  போவதை நான் தள்ளிபோட்டுகொண்டேயிருந்தேன் ,
மயிலாப்பூரில் இருந்தாலும் , வீட்டிலுருந்து ராமகிருஷ்ண மடம் நடக்கும் தூரம் தான் என்றாலும் , அந்த வழியே அடிக்கடி  போனாலும், உள்ளே  போவது இல்லை ,
ஒரு வேளை ராமகிருஷ்ணர் என்னை  பார்க்க விருப்பபடவில்லையோ , ஏன்   அவரை பார்ப்பதற்கு  இன்னும் appointment தரவில்லை என ,போகாததற்கு காரணங்களை வழக்கம் போல அவரை  பார்க்கும் போதெல்லாம் சொல்லி வந்தேன் ..
சில நாட்கள் முன்பு பெய்த மழையில் நனைந்து , கடுமையான ஜலதோஷம் , ஜீரம் என படுக்கையில் நான்கு நாட்கள்   , பிரட்  , oats கஞ்சி தவிர ஏதும் சாப்பிட முடியாமல்,வெளியே எங்கும் போகாமல் வீட்டிலே இருந்த போது flash அடித்தது ,

இன்று ஏன் ராமகிருஷ்ண மடம் போக கூடாது  ...
பார்க்கிங்  செய்ய இடம் இல்லாத அளவு கூட்டம்,
உள்ளே நுழைய அத்தனை பக்தி வழியும் , கருணை முகங்கள் , ராமகிருஷ்ண மடம் வெளியே  காத்திருந்தது , ராமகிருஷ்ண மடம் உள்ளே பஜனை நடந்து கொண்டு இருந்தது  உள்ளே கூட்டு பஜனை பிரார்த்தனை போல பாடிக்கொண்டிருந்தார்கள்.
 உள்ளே அந்த தியான ஹால் முழுக்க இன்னும் நிறைய அனுபவ பக்தி , அனுபவ கருணை வழியும் பக்தி முகங்கள்,  எவ்வளவு கூட்டம் , எத்தனை பக்தி , என வியக்க வைத்தது , வெளியே காத்திருந்த பக்தி முகங்களுக்கு உள்ளே இடம் இல்லாததால் வெளியே இருந்து பிரார்த்திகிரார்களோ என எண்ணியபடி  மடத்தை சுற்றி நடந்து வந்தேன் ,
ஒரு சிவப்பு குல்லாய் போட்டிருந்த படி , தன் வெள்ளை வேட்டி சட்டை நண்பவரிடம் பேசி கொண்டிருந்த நபர் என்னை வித்தியாசமாக பார்த்தார் , நம் முகத்தில் இன்னும் உண்மையான பக்தி குடியேறவில்லையோ, அதான் சந்தேகமாக பார்க்கிறாரோ  என குழம்பியபடி அவர் கண்களை தவிர்த்து நடந்து கொண்டிருந்தேன் .
கோவில் என்றால் சுத்தம் என்பார்களே ராமகிருஷ்ண மடம் பரிசுத்தம் , படுசுத்தம், காலை தரையில் அழுத்தி தேய்த்தாலும் ஒரு தூசியை பார்க்க முடியவில்லை  , எதை வைத்து எப்படி தான் சுத்தம் செய்கிறார்களோ அவ்வளவு சுத்தமான தரை ..
அதே வளாகத்தில் இருக்கும் பழைய ராமகிருஷ்ண மடம் சென்று ஆளுயர சாரதா தேவியை வணங்கி , மாடியில் இருக்கும் ராமகிருஷ்ணர் , விவேகானந்தர் முன் நின்று எல்லாரையும் போல் விழுந்து வணங்கி , இரண்டு நிமிஷம் இன்ஸ்டன்ட் தியானம் செய்து , புதிய ராமகிருஷ்ண மடம் வந்தபோது , பஜனை ஒலிகள் முடிந்து இருந்தது , ஆனால்  கூட்டம் கொஞ்சம் எதையோ எதிர்பார்த்து பரபரப்பாகி கொண்டு இருந்தது .
எல்லோரும் ஒரு திசை நோக்கி திரண்டு கொண்டிருந்தார்கள் ,
அங்கே மடத்து ஊழியர்கள் இரண்டு பெரிய ட்ராலிகளில் பெரிய ,  பெரிய நான்கைந்து அண்டாக்களோடு வந்து அண்டாக்களை கைபிடிதுணி கொண்டு இறக்கி வைத்தார்கள் , காத்திருந்த  கூட்டம் ஒழுங்கான வரிசையமைத்து கட்டுப்பாடாக முன்னேறி கொண்டிருந்தது ,
அங்கே தாமரை இலை தொன்னையில் சுட சுட சாம்பார் சாதம் கொடுக்க ஆரம்பித்தார்கள் ,
அந்த சிவப்பு குல்லாய் காரர் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தார் , அவர் என்னை முறைப்பது போல தெரிந்தது ,
நான் விலகி தியான ஹால் உள்ளே சென்று ஆளுயர ராமகிருஷ்ணரை மனதில் இருத்தி கண்களை மூடியபோதுகூட்டம் சாம்பார் சாதம் ,நீண்டவரிசை நினைவில்  வந்து வரிசையில் நிற்கும் போது , விரல்களை ஊதி ஊதி தின்று கொண்டிருந்த சிவப்பு குல்லாய்காரர் , கையை பேப்பரில் துடைத்தபடி மறுபடியும் என் பின்னால் நின்றார் ,

என்ன இது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இரண்டாம் முறை  வாங்க வேறுவரிசையில்வந்து ிநிற்கிறாரே  என நினைத்தபடி வரிசையில் முன்னேறி , சூடும் , நெய்யும் மணக்கும் அந்த சாம்பார் சாதத்தை வாங்கி வந்து விரலால் கிளறி , வாயால் ஊதி ஒரு திவலை சாப்பிட்ட போது தான் உண்மை புரிந்தது .. ஆஹா என்ன தெய்வீக ருசி , இத்தனை ருசியான சாம்பார் சாதம் இதுவரை சாப்பிடதே இல்லையே , தின்ன , தின்ன நாக்கில் நீர் ஊறியது , முள்ளங்கி , மாங்காய் , கேரட் , உருளை , பீன்ஸ் , முருங்கை என எல்லா காய்கறிகளும் கூட்டணி அமைத்து அளவான புளிசாறு கலந்து அத்தனை ருசி .. இரண்டு நிமிடத்தில் ருசி தீர்ந்து , சாம்பார் சாதம் தீர்ந்து விட்டது ..
அப்போது தான் உணர்ந்தேன் நான் என்னையும் அறியாமல்
கையை துடைத்து கொண்டு மறுபடியும்  வரிசையில் நிற்கிறேன் , எனக்கு முன்னே சிவப்பு குல்லாய்காரர் மூன்றாவது முறையாக நிற்கிறார்
இத்தனை ருசிமிக்க சாம்பார் சாதத்துக்கு முப்பதாவது முறையாக நின்றாலும் தவறில்லை என்ற உண்மை புரிந்தபோது அவரை பார்த்து புன்னகைத்தேன் அவரும் ஒரு அழகான நட்பு பாராட்டும் புன்னகை வீசினார் .
இரண்டாவது கப் உள்ளே போய் கொண்டிருந்தபோதே கூடிய  பக்திமுகங்கள் கண்களில் தெரிந்தது ஒரு பரவசம் .
மனஉறுதி கிட்டும் , ஆன்ம பலன்  கிட்டும் என்றெல்லாம் சொன்ன தோழி இத்தனை அருமையான சாம்பார் சாதம் கிடைக்கும் என சொல்லவில்லையே என வருத்தப்பட்டு கொண்டிருந்தபோது சிவப்பு குல்லாய்காரர் என்னை அடுத்த ரவுண்டுக்கு அழைத்தார் ,
எனக்கு ராமகிருஷ்ணரின் அருள் ஆசி கிடைத்து விட்டதாய் உணர்ந்து அவருடன் வரிசையில் நிற்க ஆரம்பித்தேன் ...


பின் குறிப்பு : 
சிவப்பு குல்லாய்காரர் சொன்னது :
பிரதி ஞாயிற்று கிழமை இரவு பஜனை நேரம் ஏழு மணி முதல் எட்டு வரை , எட்டு மணிக்கு பின் பிரசாதம் விநியோகம் எட்டு முப்பதுக்குள் முடிந்து விடும் ,
 , மற்ற நாட்களில் வெறும் கல்கண்டு மட்டும் தானாம் .
சாம்பார் சாதம் தவிர , வெஜிடபிள் பிரியாணி , தயிர் , மிளகு சாதம் ஒவ்வொன்றும் அதன் அளவில் தனிசுவை கொண்டதாம் , அவர் இரண்டு வருட அனுபவத்தில் சொன்னது .
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றி அவரிடம் கேட்ட போது அவர் சாமியா , இல்லை தம்பி அவர் குரு ,  மகான், ஆசான்  வாழக்கை தத்துவங்கள் சொன்னவரு இவுங்க அவரையும் சாமி மாதிரி கும்புடுறாங்களே என வருத்தபட்டுகொண்டார் 

Monday, April 20, 2015

O.K KANMANI [ ஓ.காதல் கண்மணி ]

காரா .. ஆட்டோகாரா .. காத்திருக்கேன்டா ...
மன மன மெண்டல் மனதில் ..
தீரா,... உலா ....என western ஆக போய் கொண்டிருக்கும் படம் இடை இடையே யூ டர்ன் அடித்து...
 நானே வருகிறேன் , நானே னே னே னே  வரு ரு ரு கிறேன் ..
மலர்கள் கேட்கிறேன் மணமே தந்தனை என tradional பேச ஆரம்பிக்கிறது ...
கலாச்சார புரட்சி என சப்தம் கொடுத்து விட்டு ,
கலாச்சாரம் காப்போம் என்ற கருத்து , அது தான், அது மட்டும் தான்  நல்லது என TAKE HOME ,

இளமை துள்ளி குதிக்கும் இசை புயலின் இசை ,
P.C வைக்கும் புதிய கோணங்கள் ,
மணிரத்னத்தின் அழகான MAKING ..
என கொண்டாட அத்தனை காரணங்கள்  இருக்கிறது படத்தில் ..
பார்க்கும் ரசிகர்களும்  கொண்டாடுகிறார்கள் ..

சுயமாய் சிந்திக்கும் ,சுயமாய் முடிவு எடுக்கும் தலைமுறை
ஏன் கடைசியில் , போட்டு வைத்த பாதையில் போக வேண்டும் ,
அது தான் பண்பாடு , கலாச்சாரம் , கட்டுப்பாடு ,
அப்படியென்றால் ஆரம்பத்தில் எதற்கு அத்தனை முற்போக்கு கட்டிப்பிடிகள் , முத்தங்கள் என புரியவில்லை ..
ஒருவேளை மணி ஸார் இந்த INSTANT கலாச்சார  காவலர்களை பார்த்து கொஞ்சம் பயந்து விட்டாரா என கேட்க வைக்கிறது சுப மங்கள கிளைமாக்ஸ் ...

ஆனாலும் எப்போதும் மணிரத்னம் பிடித்த இயக்குனராகவே இருந்து விடுகிறார் ..

container is important than content என்பது மார்க்கெடிங் புகழ் மொழி ..
மணி சார் container எப்பவும் பிரமாதமாக இருக்கும் ..
என்ன content சில சமயம் பழசாக இருக்கும் ..

ஓகே கண்மணி ,
CONTENT பழசு CONTAINER புதுசு ...


Friday, April 17, 2015

அவன் மாறவில்லை ...

அவன் மாறி விட்டான்
அவன் யார்???
 அவன் தான் இந்த ஜனனத்திரளின் அடையாளம் ,
அவன் தான் மனிதன் , அவன் மாறிவிட்டான் என்பதை தான் யுகம் , கனம் , திடம் எல்லாவற்றிடமும்  சொல்லி திரிகின்றான் ..அவன் உண்மையில் மாறி விட்டானா ?உண்மையான பதில் இல்லை ..
அவன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு இருக்கிறான் , மாறி விட தான் துடிக்கிறான் , மாறி விட்டதாக நம்புகிறான் , மாறி விட்டதாக நடிக்கிறான் , ஆனால் அவனால் மாற முடியவில்லை என்பதை அவன் ஒப்பு கொள்கிறான் ,
அது தான் அவனை மாற்றத்தை நோக்கி உந்து தள்ளுகிறது , மாற்றத்துக்கான விதையை , பிடியை தேடி அலைகிறான் ,
அந்த அலைச்சலில் கிடைக்கும் சில வெற்று சிப்பிகளில்  ஏமாற்றம் கண்டு வெறுங்கையுடன் திரும்ப மனமில்லாமல் , மாற்றம்  என்ற பொய்களை விதைத்து அதை நம்ப தயாராகிறான் ,
அந்த நம்பிக்கை சில காலம் அவனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது , அதன் ஈர்ப்பு குறையும் போது அவனுக்கு புரிந்து விடுகிறது தான் இன்னும் மாறவில்லை , மாற்றம் என்ற மாயையில் சிக்கி கொண்டிருக்கிறோம் என ..
மறுபடியும் ஓட்டம் , மறுபடியும் மாற்றம் என அவன் நிகழ்த்தும் இடைவிடாத ஓட்டம் அவனுக்கு ஒன்றை உணர்த்துவதாக இருக்கிறது ,  அவன் மாற்றத்துக்காக விதைக்கபட்டவன் , மாற்றத்தை நோக்கிய அந்த பயணம் எல்லையில்லாததாக இருக்கிறது , இன்னும் எத்தனை தூரம் ஓடினால் மாறலாம் என்பது புலப்படவில்லை , ஆனால் ஓட வேண்டும் மாற்றத்தை நோக்கி , இந்த மாற்றம்  என்பது அவனின் பரிணாமம் சார்ந்த மாற்றமா , பரிணாமத்தின் எல்லையில் நிற்கும் இவன் அதன் கடைசி புள்ளியா , அடுத்த புள்ளி தான் இவனின் மாற்றமா என்பதை கண்டு கொள்ள இவன் வெகு தூரம் செல்ல  வேண்டும் , அதுவரை  இணையத்தின் பிடிக்குள் இருக்கும் ஸ்மார்ட் போன்களும் , செயற்கைகோள்களும் , பிரித்தெடுக்கபட்ட டி.என்.ஏ க்களும் ,  மாற்றம் என நம்பி விளையாடிக்கொண்டிருப்பான் ...
சிறிதாய் இருள் கவியும் இரவுகள் பயத்தை விதைக்கும் நேரங்களில்  தெரிய வரும் தான் இன்னும் மாறவில்லை ..
 அவன் கால்கள் ஓட்டம் எடுக்க தயராகும் மாறிவிட வேண்டும் என ...

Sunday, April 12, 2015

ஓ காதல் கண்மணி ...

ஓ காதல் கண்மணி ..இசை  வெளியான நாள் முதல் காலை,  மாலை, உணவுக்கு முன் , உணவுக்கு பின் , உணவோடு என இந்த பாடல்கள் என்னோடு  இரண்டற கலந்து இருக்கிறது ,,

ஏ .ஆர் . ரகுமான் புதிய இசை பரிணாமங்களை நமக்கு அறிமுகபடுத்திக்கொண்டே இருக்கிறார் ..
 Maula Wa Sallim   என்ற பாடல் ஏ .ஆர் . ரகுமான் மகன் அமீன் பாடியிருக்கிறார் ..

கேளுங்கள் ஒரு முறை இசை ரசனை என்பது , மொழி , மதம் , இனம், கலாச்சாரம்  கடந்தது என்ற உண்மை புரியும் ..

வஸந்த்

இயக்குனர்  வஸந்த் .. வண்ணங்களை காகிதங்களில் தோய்க்கும் ஓவியராய், எண்ணங்களின் வண்ணங்களை பிலிம் சுருளுக்குள் நேர்த்தியோடும் , நேர்மையோடும் வரையும் ..., நவீனத்தையும்  , மரபையும் ,கண்ணாடி அணிவித்து , அலங்காரம் பூசி காட்டாமல் உள்ளது உள்ளபடி காட்டும்... , வார்த்தைகளின் வலிகளையும் , உணர்வுகளின் நெகிழ்ச்சியையும், செல்லுலாய்டில் செதுக்கும் சிற்பக்காரர் .

இடுப்பு நடனங்கள் , இறுக்க தழுவல்கள்  , இரட்டை அர்த்தங்கள் , ஸ்லீவ் லெஸ் கைகள் , பேன்ட்லெஸ் கால்கள் மட்டுமே மாறி மாறி  காட்டப்படும்  ஐந்து நிமிட பாடல் காட்சியில் , தண்ணீரையும் , காற்றையும் , ஆகாயத்தையும் , மண்ணையும் , தீயையும் , அழகியல் குறையாமல் , ஆகிருதி குறையாமல் காட்டி ஐம்பூதங்களை ஐந்து நிமிட பாடல் காட்சிகளின் கதாநாயகன் ஆக்கிய பராக்கிரமசாலி.

கேளடி கண்மணியில்  குழந்தையின் நோக்கில் தாய் தந்தை பாசத்தின் சமநிலை காட்டி எல்லோர் கண்களிலும் கண்ணீர் துளிகளை பூக்க வைத்து , அதை  தென்றலாய் இசை சாரலோடு உலர வைத்து  ஆரம்பித்த வஸந்த காற்று , நீ பாதி நான் பாதி  , ஆசை , நேருக்கு நேர் , பூவெல்லாம் கேட்டுப்பார், அப்பு , ரிதம்  , ஏய் நீ ரொம்ப அழகாயிருக்க , சத்தம் போடாதே , என்று தொடர்கிறது .. திரையில் இலக்கியத்தையும் , இலக்கியத்தில் திரையையும் அதனதன் பராக்கிரம் குறையாமல் படைக்கும் வித்தையில் விளைந்த  முத்துக்களின் பட்டியலில் , தக்கையின்  மீது நான்கு கண்கள் , விசாரணை கமிஷன் என்ற  சா. கந்தசாமியின் படைப்புகள் செல்லுலாய்டில்  வீரியமாய் விதைக்கப்பட்ட விதைகள் ...

[இயக்குனர் வஸந்த்  பற்றி ஆய்வரங்கில் நான்  எழுதி வாசித்த கட்டுரையின் இனிய பதிவு உங்கள் பார்வைக்கு..  

வைரமுத்து


வைரமுத்து தேனி தந்த தமிழ்தேனீ
திரைத்தமிழ் ஒருபடி மேல் நோக்கி நகர  தமிழ்த்தாய் பெற்றெடுத்த ஏணி ..
சங்கத்தமிழ் ,
பாரதிதமிழ்
கண்ணதாசன் தமிழ்
அடுத்து வைரமுத்து தமிழ்
ஆமாம் ..
வைரமுத்து தமிழுக்கு இன்னொரு அடையாளம் ,
அவரின் தமிழ்
தமிழின் இன்னொரு அடையாளம் ...
எழுத்தின் அதே கம்பீரம் பேச்சில்
பேச்சின் அதே கம்பீரம் உருவத்தில் ..
சங்கமும் , நவீனமும் இணையும் புள்ளி வைரமுத்து.
பூ பூக்கும் ஓசையையும்
புல் விரியும் ஓசையும் கேட்க தெரிந்தவர் ..
சின்ன சின்ன ஆசை என இவர் போட்டு வைத்த பட்டியலில் இருக்கிறது வாழ்வின் சொர்க்கம் ..
கரிசல் காட்டு மொழிகளை கணினி அறைகளில்  கசியும் சங்கீதம் ஆக்கினார் .
காலம் வஞ்சித்த கிராமத்து மொழியை அரியணை  ஏற்றினார் .

இவர் வரிகள் கிராமங்களின் இரவு தாலாட்டு
நகரங்களின் பகல் இயக்கம் ..
கவிதைகளுக்கும் , திரை இசை பாடல்களுக்கும் இவர்  போட்ட பாலத்தில் தான் இன்றும் புதிய தலைமுறை கம்பீரமாய் நடக்கிறது ..
இவர் வரிகளை நயாகராவில் நாயக, நாயகிகள் பாடி ஆடினால் அமெரிக்கா எங்கும் தமிழ் மணம்  வீசும் .
கலிபோர்னியாவும் கம்பன் கழகம் ஆரம்பிக்க ஏங்கும்...
ஐஸ்வர்யாராய் ஐம்பது கிலோ தாஜ்மஹால் என்பதை கண்களாலே எடை போடும் கற்பனை வளம் தான் வைரமுத்து ..
சுஷ்மிதாசென் காதல் கொண்டு காதலன் கையில் மிதக்கும் போது , காதலில் பொருட்கள் எடையிழக்கும் என்ற உண்மை சொன்ன அறிவியல் நியூட்டன் வைரமுத்து .
ஆரியத்தையும் , திராவிடத்தையும் மொழியினால் காதல் கலவி செய்ய வைக்கும் பிரமாண்டம் தான் வைரமுத்து .
காம்போடு இருக்கும் பூ காற்றில் ஆடுவதை ஒற்றைகால்நடனம் என்பதை  வைரமுத்து கண் கொண்டால் தான் பார்க்க முடியும் .
பிரபஞ்சம் பற்றின உண்மை சொல்ல அறிவியல் தெரிய வேண்டும் என்றில்லை ,இவரின் தண்ணீர் தேசம் படித்தால் போதும் ஆயிரம் சுற்றுச்சூழல் போராளிகளை உருவாக்கும் ஆயுதம் அது .
இவர் காதல் வரிகள் எழுதினால் இளைஞனுக்குள் இன்பத்தீ பிடிக்கும் ..
இவர் சமுகம் பற்றி எழுதினால் அவனுள் புரட்சி கொடி பிடிக்கும் ,

இயற்கை மேல் இவர்போல் பேரன்பு கொண்டஆளில்லை என்பதை மரம் பற்றின இவரின் ஒற்றைவரி சொல்லும் ..
மரம் இருக்கும் வரை பூ பூக்கும் ,
இறக்கும் வரை காய் காய்க்கும்
வெட்டி நட்டால் கிளை மரமாகும்
வெட்டி நட்டால் கரம் உடலாகுமா ..
மனிதா !! மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா ! ஒவ்வொரு மரமும் போதி மரம் தான் ..


கற்பனைகளை  மட்டும்  சேர்த்தெழுதி கைதட்டல் வாங்கும் மொழி இல்லை வைரமுத்து ..
கல் நெஞ்சும் நீர் சுரக்கும் , கடும் பாறை கண்ணீர் விடும் இவர் உணர்ச்சி ஊற்றி எழுதினால் ..
அம்மா பற்றி கொஞ்சமும் வார்த்தை ஜாலம் இன்றி உண்மையாய் எழுதிய இந்த வரிகள் அது வைரமுத்துவால் மட்டும் தான் முடியும் ,
அதை எழுத வைரமுத்து ஆனால் தான் முடியும் ..!!.
வைரமுத்து பிறப்பான்னு வயித்தில் நீ சுமக்கவில்லை
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு  ..
எனக்கு ஏதும் ஆச்சுதுன்னா உனக்கு வேறு பிள்ளையுண்டு
உனக்கு ஏதும் ஆச்சுதுன்னா எனக்கு வேறு தாய் உண்டா ..
இந்த வரிகள் , அதன் உணர்ச்சிகள் ,
அதன் உண்மைகள் இது தான் வைரமுத்து ..
 ஏழை சொல் அம்பலம் ஏறுமா என்பார்கள்

ஆனால் வைரமுத்து எழுதின பின்பு கருவாச்சி - காவியம் ஆனாள் கள்ளிக்காடு - இதிகாசம் ஆனது .. 

HATS OFF வைரமுத்து ..

[வைரமுத்து அறுபதாம் பிறந்த நாளுக்காக ...]

ருத்ரய்யா



முப்பத்தாறு வருடங்கள் கழித்தும்  ஒரு சினிமா புதிதாக இருக்கிறது , அந்த சினிமாவின் மொழி புதிதாய் இருக்கிறது , அந்த சினிமா பேசிய கருத்து  புதிதாக இருக்கிறது , அந்த கதாபாத்திரங்கள் புதிதாய் இருக்கின்றன ,
அந்த பாத்திரங்களின் mannerism , சிந்தனை , செயல் , முடிவுகள் , அவர்களின் விவாதங்கள் எல்லாம் இன்றும் விவாதங்களின் மிச்சமாக இன்னும் விவாதிக்க வேண்டிய பொருளாக இருக்கிறது . அந்த சினிமா  எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை , அது பேச எடுத்துக்கொண்ட விசயங்களை இன்னும் யாராலும் பேசிமுடிக்க முடியவில்லை . அந்த சினிமா ‘அவள் அப்படித்தான்’ ,

முப்பத்தாறு வருடங்கள் முன்பு ஒரு இளைஞனின் கோபம் தமிழ் சினிமா மொழியை மாற்றி எழுத வைத்தது , தமிழ் சினிமா என்ற பிம்பத்தை , அதன் உளுத்து போன பார்முலாவை உடைத்து எறிய அவன் அதே சினிமாவை ஆயுதமாக எடுத்துக்கொண்டான் .
தொழில்நுட்பத்தையும்  , பேசுபொருளையும் , நடிகர்களையும் மிகச்சரியாய் HANDLE செய்து , BUDGET , ARTIST , MARKETING , என நல்ல சினிமா எடுக்க எதுவுமே தேவையில்லை , தடையில்லை என நிரூபித்து தமிழ் சினிமாவில் புதிய அலையை அடிக்க வைத்து ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அந்த இளைஞனின் பெயர் ‘ருத்ரய்யா’.

expiray date  எப்போதும் நல்ல படைப்புகளுக்கு இல்லை என்பதை அவள் அப்படித்தான்  திரைப்படத்தை  பார்க்கும் ஒவ்வொரு முறையும் உணரலாம்  , புதிதாய் அதை தேடி பார்க்கும் ஒவ்வொரு புது ரசிகனும் அதை அனுபவிக்கலாம் .


படம் முழுக்க  camera angles , sound mixing , composition of shots  , நடிகர்களின் சிறிதும் மிகையில்லாத நடிப்பு என மொத்த படத்தின் தொழில் நுட்ப நேர்த்தி உலகத்தரத்தில் இருக்க காரணம் சினிமா மொழியை நன்கு அறிந்த , புதிய பாதை போட வேண்டும் என்ற  கனவுகளோடு இருந்த ருத்ரய்யா .

சமூக சேவகி வீட்டில் கமல் அவரை பேட்டி எடுத்து கொண்டிருப்பார், எல்லோருக்கும் instructions கொடுத்து விட்டு , டேக் போகும் முன் ஸ்டார்ட் , கேமரா சொல்லி ரோலிங் சொல்லும் போது அந்த பிலிம் கேமரா ரோல் ஆகும் sound பின்னணியில் கேட்கும் , அந்த பேட்டி முழுக்க அந்த கேமரா sound மிகைபடுத்த படாமல் live ஆக இருக்கும் , அந்த சப்தம் அங்கு ஏன்  கேட்க வேண்டும் என்றால் அது தான் தொழில் நுட்ப நேர்த்தி,  அது தான்  ருத்ரய்யா.
என்ன MAKE UP போட்டுக்கட்டும் , எப்பவும் போல SOCIETY MAKE UP போட்டுக்கங்களேன் , ஒரு நிமிஷத்துல முடிச்சுடுறேன் , என்ன கோவத்தையா , அவுங்க அப்டிதான் இருப்பாங்கன்னா நானும் அப்டி தான் இருப்பேன்  என சூழ்நிலைகளை மீறாத வசனங்கள் ,அது தான் ருத்ரய்யா.
அவள் அப்படித்தான் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தின் design  இன்னும் யாராலும் புரிந்து கொள்ள முடியாத ,தொட முடியாத தூரத்தில் இருக்க , காரணம் அதை  வடிவமைத்த விதம் ,அது தான்  ருத்ரய்யா,
 ஸ்ரீபிரியா பிளாஷ்பேக் சொல்லியபடி புரியாத கோபம் வந்து கமலை அடிக்க ஆரம்பித்து , கத்தி எடுத்து கொல்ல முயற்சித்து ,, டாய்லெட்டில் கட்டி  அணைத்து தேம்பும் ஒரு காட்சி ,அது தான் ருத்ரய்யா.
கமல் documentry ஷூட் செய்ய பெண்களிடம் கேள்வி கேட்க அவர்கள் சண்டை போட்டபடி பதில் சொல்ல , பெண்கள் பற்றி படம் முழுக்க ரஜினி பேசும் விஷயங்கள் , என எந்த கருத்தையும் யார் மீதும் திணிக்காத , யார் சரி , யார் தவறு என judjement சொல்லாத , இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து புதிய சிந்தனையை தூண்ட ,  சினிமாவை பேச வைத்தவர் அவர் தான்  ருத்ரய்யா.

காலம் கடந்து ஏன் இந்தப்படம் பேசப்படுகிறது , ஏன் ரசிக்கபடுகிறது , மாணவனாக இருந்தபடி ஒரு ஆசிரியராக செயல்பட்டிருக்கிறார் ருத்ரய்யா , படம் முழுக்க நாம் கற்றுக்கொள்ளப்பட வேண்டிய பாடங்களை புதைத்து வைத்திருக்கிறார் .
கால சுழற்சியில் பார்முலா பந்தய சினிமாவை , உளுத்து போன ஓட்டைகளை சீர் செய்ய கோபம் கொண்டு கேமரா தூக்கும் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ருத்ரய்யாவின் விதை இருக்கும் என்பது தான் ருத்ரையாவின் வெற்றி ..

அப்படி புதிய படைப்புகள் வரும் நாள் எல்லாம் ருத்ரய்யா வாழ்வார் . ஏனென்றால் ருத்ரையாக்கள் எப்போதும் மறிப்பதில்லை .

ருத்ரய்யா மறைந்த போது எழுதப்பட்ட பதிவு ]

Wednesday, April 8, 2015

JK

JK

ஜெயகாந்தன் ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்..
ஜெயகாந்தன்  கம்பீரத்தின் அடையாளம் ..
ஜெயகாந்தன்  புனைவு மட்டுமே எழுத்தாகும் அபாயத்திலிருந்து சக மனிதனை , அவனின் உணர்ச்சிகளை, அவன் மன சிக்கல்களை  எழுத்தில் கொண்டு வந்தவர் .
ஜெயகாந்தன் மனிதனில் இருக்கும் உன்னத உணர்ச்சிகளை , படம் பிடிக்க தெரிந்தவர் .
ஜெயகாந்தன் கையில் திருவோட்டோடு நிற்கும் ஒருவன் எத்தனை ஞானச்செல்வன் என பார்க்க தெரிந்தவர் ..
ஜெயகாந்தன் ஒரு பிரமாண்டம்
ஜெயகாந்தன் ஒரு ஆகிருதி
ஜெயகாந்தன் ஒரு  நூற்றாண்டின் எழுத்தாளர்..

RIP JK


Monday, April 6, 2015

கரக்... மொறுக் ...

இப்போது SELF CONFIDENCE ஐ விட எல்லாருக்கும் செல்பி CONFIDENCE தான் நிறைய இருக்கிறது 
                                  --------------******---------------
நம்மை பங்கேற்க வைக்க கேட்கப்படும் கேள்விகள் எளிமையாகவும் , நமக்கு பரிசளிக்க கேட்கப்படும் கேள்விகள் கடினமாகவும் தயாரிக்கப்படுகிறது.
                                         --------------******---------------
வண்டியில் இருக்கும் ஹார்ன் பல நேரத்தில் சைரனாக உபயோகப்படுத்தப்படுகிறது .
                                           --------------******---------------
புதுச்சட்டை வாங்கியதுமே போட்டு பார்த்துவிடுகிற ஆர்வம் ,புத்தகம் வாங்கியதும் படித்து விடுவதிலும் இருந்தால் , வாசிக்கப்படாத புத்தகங்களால் நிரம்பியிருக்காது என் அலமாரி.
                                            --------------******--------------- 
ஒரு கட்டத்தில், கடந்த காலத்தின் கஷ்டமான தருணங்களை நினைத்து பார்ப்பது இன்பமாகவும் , கடந்த காலத்தின் இனிமையான தருணங்களை நினைப்பது வலியாகவும் அமைந்து விடுகிறது .
                                                --------------******---------------
நண்பர்கள் மட்டும் இல்லையென்றால் , தினம் சுழலும் இந்த 24 மணி நேரத்தை வைத்துக்கொண்டு என்ன தான் செய்து விட முடியும் .
                                                      --------------******---------------
உனக்காக உலகையே விலைக்கு வாங்குவேன் என்கிறேன், நீயோ திண்டிவனம் அருகே ஒரு பிளாட் வாங்கி கொடு அது போதும் என்கிறாய் .
                                                              --------------******---------------
மகிழ்ச்சியாக இருக்க மகிழ்ச்சியாக இருப்பது ஒன்று தான் சிறந்த வழி ..
                                                               --------------******---------------
வெற்றி ஒன்று தான் அத்தனை காயங்களுக்கும் மருந்து , ஆனால் அந்த வெற்றிக்காகத்தான் அத்தனை காயங்களும் 
                                                                --------------******---------------
ஒருவர் யாரோ ஒருவரின் லட்சியத்துக்காக உழைக்கும் செயலின் பெயர் வேலை .
                                                                --------------******---------------
வீட்டுக்கு INTERIOR செய்கிறது போல , மனசுக்கு INTERIOR செய்யவும் வித விதமான தியான, CORPORATE சாமியார்கள் , மனசை DECORATE பண்ண எதற்கு இத்தனை செலவுகள் , இத்தனை ஆட்கள் ,, நாமே கூட்டி பெருக்கி சுத்தமாக வைத்துகொண்டால் போச்சு .
                                                                  --------------******---------------
பேப்பர் போடுவதற்கே அதிகாலை விழிக்க வேண்டியிருக்கும் போது, அந்த பேப்பரில் தலைப்பு செய்தியாக வர தூக்கமே இன்றி விழிக்க வேண்டியிருக்கும் .
                                                                      --------------******---------------
நிறைய இடம் பிடித்து வைத்திருப்பவர்கள் எல்லாம் HISTORY'யில் இடம் பிடிப்பதில்லை.
                                                                     --------------******---------------
மால் தியேட்டர்களில் ஷாப்பிங் செய்வதை விட பார்க்கிங் செய்வது தான் காஸ்ட்லி கத்திரிக்காய் .
*****************************************************######***********************************************

நீதிபதி

எல்லோருக்குள்ளும் ஒரு நீதிபதி இருக்கிறான் , அவன் காண்பது , கேட்பது , கேட்டவரிடம் இருந்து கேட்பது என எல்லாவற்றை பற்றியும் தீர்ப்பு சொல்லிக்கொண்டே போகிறான் , கொஞ்சம் நின்று நிதானமாக விசாரித்தால் தான் தீர்ப்பு சொல்ல தகுதியுடையவனா என்ற கேள்வி எழுந்து அந்த நீதிபதி காணாமல் போக வாய்ப்பு இருப்பதால் அவன் அதை செய்வதில்லை 

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...