Sunday, July 28, 2013

அம்மாவை போல சண்டையிட தெரியாதவன்


                                   ஸ்கை ப்ளூ சட்டை அணிந்து , தலைக்கு வெள்ளை நிற செவ்வக கிளிப் வைத்த , வெளிர் மஞ்சள் , மாம்பழ நர்சுகள் பச்சை காலணியோடு நடந்து கொண்டிருந்த ‘எலைட்’ வார்டின் 309 வது அறையில் பின்புறம் சாய வசதிமிக்க சிவப்பு குஷன் சேரில் அமர்ந்து கொண்டிருந்தேன் .
செண்ட்ரலைஸ் ஏ.சி சத்தம் போடாமல் கழுத்தில் குளிரூட்டிக்கொண்டிருந்தது. வயலினும் கிதாரும் இன்னுமொரு புரியாத இசையும் கரைந்து கொண்டிருந்தது .
நான் இருக்கையில் இருந்து எழுந்து ஒரு அடி எடுத்து வைத்தால் என் அம்மாவை தொட்டு விடலாம்.லேசாக அவளுக்கு தலை கோதலாம், நெற்றியை நீவி விட்டு ஈரமில்லாத ஒரு முத்தம் தரலாம், வெடித்திருக்கும் அந்த பாதங்களை பிடித்து விடலாம், நரம்புகள் தளர்ந்து ஓடும் அவளின் பச்சை விரல்களுக்கு நெட்டி எடுக்கலாம்,கழுத்தில் கை வைத்து உடல் எவ்வளவு சுடுகிறது என பார்க்கலாம், போர்வையை சரியாக போர்த்தி விடலாம்,ஓரமாய் கசிந்திருக்கும் அந்த ஒற்றை நீர் துளியை துடைத்து விடலாம் .
வறண்ட உதடுகளுக்கு நீர் புகட்டி ஈரமாக்கலாம் , அவள் என்னை கண்டு கண் திறக்கும் போது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த ஆரஞ்சு சுளைகளை உரித்து கொடுக்கலாம், மிதமான சூட்டில் சர்க்கரை போடாமல் ஹார்லிக்ஸ் கலந்து கொடுக்கலாம்,பாலில் ஊற வைத்த இடியாப்ப துணுக்குகளை ஊட்டி விடலாம் , ரெண்டு நாள் தாம்மா வீட்டுக்கு போய்டலாம் என ஆறுதல் பேசலாம் .
அறையில் யாருமே இல்லையே என்னை தவிர , எழலாம் அம்மாவை கவனிப்பதில் கூச்சம் கோர்ந்த நிமிடங்களின் முட்களை நான்காய் எட்டாய் உடைத்தெறிந்து அம்மாவின் உலர்ந்து வெடித்த கால்களை என் உள்ளங்கை சூடு கொடுத்து தேய்த்து விடலாம் , அதோ அவள் வறண்ட உதடுகள் முனுமுனுக்கும் வார்த்தைகளை கூர்ந்து கேட்கலாம் .
அவள் என்னிடம் பேசத் துடிக்கும் கடைசி வார்த்தைகள் அந்த முனகலில் ஏதும் மிச்சம் இருக்கலாம் .
என்ன சொல்ல  போகிறாள் என்னிடம் , நிறைய இருக்கும் அவளுக்குள் அவள் என்னிடம் சொல்வதற்காய், ஹாஸ்பிட்டலில் வேலை முடிந்து வீடு வரும் என் இரவு பொழுது சாப்ட்டியா , மாத்திரை போட்டுட்டியா என விசாரிப்புகளோடும் , பரபரப்பாய் கிளம்பும் அதிகாலை அக்கரையாய் அவளுக்கான மாத்திரைகளை நான் அவளிடம் கொடுத்து செல்வதுமாய் கழியும்.
என்னை டாக்டராய் பார்க்க நினைத்த கனவுக்காய் அவள் உழைத்த உழைப்பு அளவுகோலுக்குள் சிக்காதது, ஒரு கரண்டி நெய் , அரை படி அரிசியில் விருந்து படைக்க தெரிந்த வித்தை கற்றவள், பருப்பு டப்பாக்களை எல்.ஐ.சி பிளான்களாக பாவிக்கும் அவளின் குணமே அடுத்தவரிடம் கையேந்த தேவையற்று அவசரங்களை காப்பாற்றியது.
அளவு இல்லாத அவளின் எனக்கான அன்பு என்னை எப்போதும்  அதிர்ஷ்டசாலியாய் ஆக்கி இருக்கிறது, பயந்து தூங்க தவித்த என் இரவுகள் அவளின் தூக்கம் கடன் வாங்கி தூங்கும்.
பத்தாவது பரீட்சை முடிந்த எனது பள்ளி விடுமுறையை மலேரியாவும்,டைபாய்டும் , மாறி மாறி பகிர்ந்து கொண்ட போது எமனோடு எனக்காய் அவள் போட்ட சண்டை நான் சிவப்பாய் எடுத்த இரத்த வாந்தியோடு இன்னும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது, நான் உடல் தேறியிருந்த போது அவள் உருமாறியிருந்தாள், நான் பொலிவு பெற பெற அவள் தேய்ந்து கொண்டிருந்தாள், நான் படிப்பு முடித்து டாக்டராகியிருந்த போது அம்மா முழுதாய் நோயாளியாகியிருந்தாள்.
முதன் முதலாய் நான் ஸ்டெதஸ்கோப் எடுத்து பச்சை நிற ஸ்பிக்மோமானோமீட்டரின் துணியை அவள் கைகளில் சுற்றி துள்ளி குதிக்கும் மெர்குரி துளிகளில் அவள் இரத்த அழுத்தம் அளந்து சொன்ன போது, நான் உலகத்து நோயாளிகளின் அத்தனை கொடிய நோய்களுக்கும் மருந்து கண்டு பிடித்து மனிதர்களை சாகாவரம் கொடுக்க பிறந்த அதி அற்புதமானவனாய் என்னை பூரித்த பார்வை பார்த்தாள்.
ஐந்தரை ஆண்டுகள் தலையணை அணைய ஐந்து கிலோ புத்தகங்களில் படங்களாகவும், நீண்ட நெடிய விளக்கங்களாகவும் பார்த்த அனாட்டமியையும், பிஸியாலஜியையும், பேத்தாலஜியையும், ஐம்பது கிலோ, எண்பது கிலோ மனித புத்தகங்களில் நான் தேட ஆரம்பித்திருந்த போது என் அம்மாவின் உடலும் நிறைய பாடங்களை கற்பிக்கும் புத்தகமாய் எனக்கு மாறியிருந்தது .
முதுமை நோய்களின் கூடாரமாகி போகும் போது ,எப்படி வெளியேற்றுவது என்ற வித்தை புத்தகங்களுக்கு அப்பால் இருக்கிறது என்ற உண்மை எனக்கு புரிந்திருந்த வேளையில் அம்மாவை கவனிப்பதற்காய் நான் வேலைக்கு அமர்த்தியிருந்த அத்தனை வேலையாட்களும் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
தன் இயலாமை கோபங்களை வெளிக்கொட்டும் வடிகாலாய் யாரும் கிடைக்காத எரிச்சலில் கொப்பளித்து ஆவியாகும் அவளின் கனல் வார்த்தைகள் , என் அம்மாவை மிகப்பெரிய கொடுமைக்காரியாய் நினைக்க வைத்து அவர்களின் தொடர் ஒட்டத்துக்கு காரணமாகியது.
ஈக்களும் , எறும்புகளும், எனை நெருங்க விடாமல் என் குழந்தை பருவத்தை நகர்த்தியவளும், என் பசியை எனக்கு முன்னமே உணர் திரன் கொண்டவளுமான , எனக்காய் யாரிடமும் சண்டையிட தயாரானவளாயிருந்த , சுகங்களின் சுகந்தத்தை மட்டுமே எனக்கு வாரி வாரி வழங்கி கொண்டிருந்த அம்மா என் அன்றாடங்களின் மிகப்பெரிய சுமையாகி போனாள்.
என் அம்மாவை கவனிப்பதில் நான் அத்தனை அக்கறை கொண்டவனாயிருந்த போதும் , நோய்களும் அவளிடம் அதிகமாய் அக்கறை கொண்டிருந்தன. சிறுநீரகம், நுரையீரல்,இதயம் என முக்கியமான அவளின் செயல்பாடுகள் மருந்து மாத்திரைகளை மட்டுமே நம்பியிருந்தது.
நான் கொடுக்கும் மருந்துகள் எத்தனை அழகாய் வேலை செய்கிறது,எத்தனை பிரச்சினை தருகிறது என்ற பார்மகாலஜியை அவளின் உடல் நலமும், கடும் பிணியும் தினம் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தது.

திங்கள் முதல் ஞாயிறு வரை , காலை , மதியம் ,மாலை இரவு என அவளுக்கான மாத்திரைகளை நான் பிரித்து வைக்கும் விதம் , சிறு வயதில் அம்மாவுக்கு தெரியாமல் விளையாடின பல்லாங்குழியை ஞாபகப்படுத்தும்.
வீட்டு வாசலில் என் அம்மாவே நட்டு வளர்த்த மாமரமும், வேம்பும் தழையாட்டி வீசும் காற்றின் ஆக்சிஜனை உள்ளுறிஞ்ச முடியாத அவளின் நுரையீரல்கள் அவள் இரத்தத்தின் கார்பன் டை ஆக்சைடின் அளவை அதிகப்படுத்தியிருந்தன.
மூச்சுத்திணறலில் அவள் உதடுகள் ஊதாவாகிப்போனபோது எங்கள் மாமரமும், வேம்பும் அவளுக்காய் வேகமாய் அசைந்து கொடுத்த அத்தனை காற்றிலிருந்தும் அவள் நுரையீரல் துளி கூட எடுத்துக்கொள்ள மறுத்திருந்தது பத்து நாட்கள் முன்பு.
பத்து நாட்களாய் அம்மா வென்ட்டிலேட்டரில், அவளுக்காக வென்ட்டிலேட்டர் சுவாசித்துக்கொண்டிருந்தது. தொண்டையில் பள்ளம் பறித்து , பிளாஸ்டிக் குழாய் செருகி மூச்சு அளந்து அளந்து போய்க்கொண்டிருந்தது.
நாளைக்கு எழுபத்தைந்தாயிரம் பிடுங்கும் ஐ.எம்.சி.யு , வெளியேறின யூரினை எட்டு வேலை அளக்கும் நர்சுகள், எடுத்துக்கொண்ட ஆக்சிஜனை இரத்தத்தில் தேடும் விரலில் தொப்பியாய் குடியிருக்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர்கள்,  முத்து முத்தாய் சொட்டும் ரிங்கர் லாக்டேட் பாட்டில்களில் , மஞ்சள் , வெள்ளையாய் குத்தப்படும் ஆண்டிபயாடிக் , ஆண்டிகொயாகுலண்ட் இன்ஜெக்சன்கள்.
தொண்டைக்குழியில் இரண்டு விரல் பள்ளம் பறித்து உள் நுழைக்கப்பட்ட டிரக்யாஸ்ட்டமியின் மூச்சுக்குழாய்கள், தேடி எடுக்க தேவையற்று தெளிவாய் கிடைத்த பச்சை நரம்புகளில் குத்தப்பட்ட வென்ப்லான்கள், என்னை சுகமாய் பிரசவித்த கருவாயில் யூரின் வழிய சொருகப்பட்ட கதீட்டர் டுயூப்கள் , தொடையின் சூட்டோடு நெருக்கமாய் வைக்கப்பட்ட பெட்பேன் , அம்மாவின் அத்தனை இயற்கை வழிப்பாதைகளும் அடைக்கப்பட்டு அவள் உயிர் வாழ்வதற்கு போராடுகிறாளா , சாவதற்கு போராடுகிறாளா என புரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.
தொடர் தேவையாயிருந்த வென்டிலேட்டர் சுவாசமே புரிய வைத்து விட்டது, அம்மா இனி மாவும் , வேம்பும் துளிர்க்கும் தருணங்களின் மகரந்த வாசனையை மட்டுமல்ல அவை மஞ்சள் மாலையின் ஈரக்காற்றுக்கு  நெளிந்து கொடுக்கும் காற்றை கூட அவளால் சுவாசிக்க முடியாது என்பதை.
அம்மாவை நான் எத்தனை நாள் வேண்டுமானலும் உயிரோடு வைத்துக்கொண்டிருக்கலாம் ஐ.எம்.சி.யு வின் வென்டிலேட்டர் நெருக்கத்தில் , பவுடர் திட்டுக்களோடு வேலைக்கு வரும் மூன்று ஷிப்டு நர்சுகளின் தூங்காத கண்களில் , சலைன் பாட்டில்களின் சோடியம் ,மெக்னீஸியத்தில், அம்மாவை நான் உயிரோடு மட்டும் வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அம்மாக்கள் வயதானவுடன் அன்றாடங்களின் மிகப்பெரிய சுமையாகிவிடுகிறார்கள்.
வாழும் போது இருக்கும் அதே கௌரவம் , சாவிலும் இருக்க வேண்டும் சம் டிகினிட்டி இன் டெத் என அம்மா படிக்க வைத்த டாக்டர் படிப்பறிவு மனதில் விதை போட்டது ஆமாம் வலியில்லாத சாவு வரம் தான்,
உடலின் ஓட்டைகளில் ஈக்கள் மொய்த்து , புழுக்களின் நெளிவுக்கு இடம் கொடுக்காமல் எனக்கு பால் கொடுத்த மார்புகளும் ,தூங்க வைத்த தோள்களும், கதை சொன்ன உதடுகளும், வலியின்றி பிரிந்து போவது நல்லது .
ஐ.எம்.சி.யுவில் இருந்து நார்மல் வார்டுக்கு வந்து இரண்டு மனி நேரம் ஆகி விட்டது, பத்து நாட்கள் அவளை சுற்றியிருந்த அத்தனை ஒயர்களிடம் இருந்தும் விடுதலை, எண்பது வருடங்கள் சிக்கியிருந்த அத்தனை பந்தங்களில் இருந்தும்.


என் அம்மாவின் பிரிந்து மூடும் உதடுகள் ‘உனக்கு இப்படியொரு நிலையிருந்திருந்தால்  நான் என்ன செய்வேன் யோசி’ என்பதாய் எனக்கு பட்டது , எனக்காய் பரிந்து யாரிடமும் எப்போதும் சண்டை போட தயாராய் இருந்தவளுக்காய் நான் மௌனத்தை ஆயுதாமாக்கி சிவப்பு குஷன் சேரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறேன் . அவள் வழி தெரியாத பயணத்துக்கு காத்துக்கொண்டிருக்கிறாள்.

- சக்கரவர்த்தி 
அமுதசுரபியில் வெளிவந்த எனது சிறுகதை ..
 நன்றி திருப்பூர் கிருஷ்ணன் சார்