Sunday, April 12, 2015

ருத்ரய்யா



முப்பத்தாறு வருடங்கள் கழித்தும்  ஒரு சினிமா புதிதாக இருக்கிறது , அந்த சினிமாவின் மொழி புதிதாய் இருக்கிறது , அந்த சினிமா பேசிய கருத்து  புதிதாக இருக்கிறது , அந்த கதாபாத்திரங்கள் புதிதாய் இருக்கின்றன ,
அந்த பாத்திரங்களின் mannerism , சிந்தனை , செயல் , முடிவுகள் , அவர்களின் விவாதங்கள் எல்லாம் இன்றும் விவாதங்களின் மிச்சமாக இன்னும் விவாதிக்க வேண்டிய பொருளாக இருக்கிறது . அந்த சினிமா  எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை , அது பேச எடுத்துக்கொண்ட விசயங்களை இன்னும் யாராலும் பேசிமுடிக்க முடியவில்லை . அந்த சினிமா ‘அவள் அப்படித்தான்’ ,

முப்பத்தாறு வருடங்கள் முன்பு ஒரு இளைஞனின் கோபம் தமிழ் சினிமா மொழியை மாற்றி எழுத வைத்தது , தமிழ் சினிமா என்ற பிம்பத்தை , அதன் உளுத்து போன பார்முலாவை உடைத்து எறிய அவன் அதே சினிமாவை ஆயுதமாக எடுத்துக்கொண்டான் .
தொழில்நுட்பத்தையும்  , பேசுபொருளையும் , நடிகர்களையும் மிகச்சரியாய் HANDLE செய்து , BUDGET , ARTIST , MARKETING , என நல்ல சினிமா எடுக்க எதுவுமே தேவையில்லை , தடையில்லை என நிரூபித்து தமிழ் சினிமாவில் புதிய அலையை அடிக்க வைத்து ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அந்த இளைஞனின் பெயர் ‘ருத்ரய்யா’.

expiray date  எப்போதும் நல்ல படைப்புகளுக்கு இல்லை என்பதை அவள் அப்படித்தான்  திரைப்படத்தை  பார்க்கும் ஒவ்வொரு முறையும் உணரலாம்  , புதிதாய் அதை தேடி பார்க்கும் ஒவ்வொரு புது ரசிகனும் அதை அனுபவிக்கலாம் .


படம் முழுக்க  camera angles , sound mixing , composition of shots  , நடிகர்களின் சிறிதும் மிகையில்லாத நடிப்பு என மொத்த படத்தின் தொழில் நுட்ப நேர்த்தி உலகத்தரத்தில் இருக்க காரணம் சினிமா மொழியை நன்கு அறிந்த , புதிய பாதை போட வேண்டும் என்ற  கனவுகளோடு இருந்த ருத்ரய்யா .

சமூக சேவகி வீட்டில் கமல் அவரை பேட்டி எடுத்து கொண்டிருப்பார், எல்லோருக்கும் instructions கொடுத்து விட்டு , டேக் போகும் முன் ஸ்டார்ட் , கேமரா சொல்லி ரோலிங் சொல்லும் போது அந்த பிலிம் கேமரா ரோல் ஆகும் sound பின்னணியில் கேட்கும் , அந்த பேட்டி முழுக்க அந்த கேமரா sound மிகைபடுத்த படாமல் live ஆக இருக்கும் , அந்த சப்தம் அங்கு ஏன்  கேட்க வேண்டும் என்றால் அது தான் தொழில் நுட்ப நேர்த்தி,  அது தான்  ருத்ரய்யா.
என்ன MAKE UP போட்டுக்கட்டும் , எப்பவும் போல SOCIETY MAKE UP போட்டுக்கங்களேன் , ஒரு நிமிஷத்துல முடிச்சுடுறேன் , என்ன கோவத்தையா , அவுங்க அப்டிதான் இருப்பாங்கன்னா நானும் அப்டி தான் இருப்பேன்  என சூழ்நிலைகளை மீறாத வசனங்கள் ,அது தான் ருத்ரய்யா.
அவள் அப்படித்தான் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தின் design  இன்னும் யாராலும் புரிந்து கொள்ள முடியாத ,தொட முடியாத தூரத்தில் இருக்க , காரணம் அதை  வடிவமைத்த விதம் ,அது தான்  ருத்ரய்யா,
 ஸ்ரீபிரியா பிளாஷ்பேக் சொல்லியபடி புரியாத கோபம் வந்து கமலை அடிக்க ஆரம்பித்து , கத்தி எடுத்து கொல்ல முயற்சித்து ,, டாய்லெட்டில் கட்டி  அணைத்து தேம்பும் ஒரு காட்சி ,அது தான் ருத்ரய்யா.
கமல் documentry ஷூட் செய்ய பெண்களிடம் கேள்வி கேட்க அவர்கள் சண்டை போட்டபடி பதில் சொல்ல , பெண்கள் பற்றி படம் முழுக்க ரஜினி பேசும் விஷயங்கள் , என எந்த கருத்தையும் யார் மீதும் திணிக்காத , யார் சரி , யார் தவறு என judjement சொல்லாத , இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து புதிய சிந்தனையை தூண்ட ,  சினிமாவை பேச வைத்தவர் அவர் தான்  ருத்ரய்யா.

காலம் கடந்து ஏன் இந்தப்படம் பேசப்படுகிறது , ஏன் ரசிக்கபடுகிறது , மாணவனாக இருந்தபடி ஒரு ஆசிரியராக செயல்பட்டிருக்கிறார் ருத்ரய்யா , படம் முழுக்க நாம் கற்றுக்கொள்ளப்பட வேண்டிய பாடங்களை புதைத்து வைத்திருக்கிறார் .
கால சுழற்சியில் பார்முலா பந்தய சினிமாவை , உளுத்து போன ஓட்டைகளை சீர் செய்ய கோபம் கொண்டு கேமரா தூக்கும் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ருத்ரய்யாவின் விதை இருக்கும் என்பது தான் ருத்ரையாவின் வெற்றி ..

அப்படி புதிய படைப்புகள் வரும் நாள் எல்லாம் ருத்ரய்யா வாழ்வார் . ஏனென்றால் ருத்ரையாக்கள் எப்போதும் மறிப்பதில்லை .

ருத்ரய்யா மறைந்த போது எழுதப்பட்ட பதிவு ]

Wednesday, April 8, 2015

JK

JK

ஜெயகாந்தன் ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்..
ஜெயகாந்தன்  கம்பீரத்தின் அடையாளம் ..
ஜெயகாந்தன்  புனைவு மட்டுமே எழுத்தாகும் அபாயத்திலிருந்து சக மனிதனை , அவனின் உணர்ச்சிகளை, அவன் மன சிக்கல்களை  எழுத்தில் கொண்டு வந்தவர் .
ஜெயகாந்தன் மனிதனில் இருக்கும் உன்னத உணர்ச்சிகளை , படம் பிடிக்க தெரிந்தவர் .
ஜெயகாந்தன் கையில் திருவோட்டோடு நிற்கும் ஒருவன் எத்தனை ஞானச்செல்வன் என பார்க்க தெரிந்தவர் ..
ஜெயகாந்தன் ஒரு பிரமாண்டம்
ஜெயகாந்தன் ஒரு ஆகிருதி
ஜெயகாந்தன் ஒரு  நூற்றாண்டின் எழுத்தாளர்..

RIP JK


Monday, April 6, 2015

கரக்... மொறுக் ...

இப்போது SELF CONFIDENCE ஐ விட எல்லாருக்கும் செல்பி CONFIDENCE தான் நிறைய இருக்கிறது 
                                  --------------******---------------
நம்மை பங்கேற்க வைக்க கேட்கப்படும் கேள்விகள் எளிமையாகவும் , நமக்கு பரிசளிக்க கேட்கப்படும் கேள்விகள் கடினமாகவும் தயாரிக்கப்படுகிறது.
                                         --------------******---------------
வண்டியில் இருக்கும் ஹார்ன் பல நேரத்தில் சைரனாக உபயோகப்படுத்தப்படுகிறது .
                                           --------------******---------------
புதுச்சட்டை வாங்கியதுமே போட்டு பார்த்துவிடுகிற ஆர்வம் ,புத்தகம் வாங்கியதும் படித்து விடுவதிலும் இருந்தால் , வாசிக்கப்படாத புத்தகங்களால் நிரம்பியிருக்காது என் அலமாரி.
                                            --------------******--------------- 
ஒரு கட்டத்தில், கடந்த காலத்தின் கஷ்டமான தருணங்களை நினைத்து பார்ப்பது இன்பமாகவும் , கடந்த காலத்தின் இனிமையான தருணங்களை நினைப்பது வலியாகவும் அமைந்து விடுகிறது .
                                                --------------******---------------
நண்பர்கள் மட்டும் இல்லையென்றால் , தினம் சுழலும் இந்த 24 மணி நேரத்தை வைத்துக்கொண்டு என்ன தான் செய்து விட முடியும் .
                                                      --------------******---------------
உனக்காக உலகையே விலைக்கு வாங்குவேன் என்கிறேன், நீயோ திண்டிவனம் அருகே ஒரு பிளாட் வாங்கி கொடு அது போதும் என்கிறாய் .
                                                              --------------******---------------
மகிழ்ச்சியாக இருக்க மகிழ்ச்சியாக இருப்பது ஒன்று தான் சிறந்த வழி ..
                                                               --------------******---------------
வெற்றி ஒன்று தான் அத்தனை காயங்களுக்கும் மருந்து , ஆனால் அந்த வெற்றிக்காகத்தான் அத்தனை காயங்களும் 
                                                                --------------******---------------
ஒருவர் யாரோ ஒருவரின் லட்சியத்துக்காக உழைக்கும் செயலின் பெயர் வேலை .
                                                                --------------******---------------
வீட்டுக்கு INTERIOR செய்கிறது போல , மனசுக்கு INTERIOR செய்யவும் வித விதமான தியான, CORPORATE சாமியார்கள் , மனசை DECORATE பண்ண எதற்கு இத்தனை செலவுகள் , இத்தனை ஆட்கள் ,, நாமே கூட்டி பெருக்கி சுத்தமாக வைத்துகொண்டால் போச்சு .
                                                                  --------------******---------------
பேப்பர் போடுவதற்கே அதிகாலை விழிக்க வேண்டியிருக்கும் போது, அந்த பேப்பரில் தலைப்பு செய்தியாக வர தூக்கமே இன்றி விழிக்க வேண்டியிருக்கும் .
                                                                      --------------******---------------
நிறைய இடம் பிடித்து வைத்திருப்பவர்கள் எல்லாம் HISTORY'யில் இடம் பிடிப்பதில்லை.
                                                                     --------------******---------------
மால் தியேட்டர்களில் ஷாப்பிங் செய்வதை விட பார்க்கிங் செய்வது தான் காஸ்ட்லி கத்திரிக்காய் .
*****************************************************######***********************************************

நீதிபதி

எல்லோருக்குள்ளும் ஒரு நீதிபதி இருக்கிறான் , அவன் காண்பது , கேட்பது , கேட்டவரிடம் இருந்து கேட்பது என எல்லாவற்றை பற்றியும் தீர்ப்பு சொல்லிக்கொண்டே போகிறான் , கொஞ்சம் நின்று நிதானமாக விசாரித்தால் தான் தீர்ப்பு சொல்ல தகுதியுடையவனா என்ற கேள்வி எழுந்து அந்த நீதிபதி காணாமல் போக வாய்ப்பு இருப்பதால் அவன் அதை செய்வதில்லை 

Sunday, July 28, 2013

அம்மாவை போல சண்டையிட தெரியாதவன்


                                   ஸ்கை ப்ளூ சட்டை அணிந்து , தலைக்கு வெள்ளை நிற செவ்வக கிளிப் வைத்த , வெளிர் மஞ்சள் , மாம்பழ நர்சுகள் பச்சை காலணியோடு நடந்து கொண்டிருந்த ‘எலைட்’ வார்டின் 309 வது அறையில் பின்புறம் சாய வசதிமிக்க சிவப்பு குஷன் சேரில் அமர்ந்து கொண்டிருந்தேன் .
செண்ட்ரலைஸ் ஏ.சி சத்தம் போடாமல் கழுத்தில் குளிரூட்டிக்கொண்டிருந்தது. வயலினும் கிதாரும் இன்னுமொரு புரியாத இசையும் கரைந்து கொண்டிருந்தது .
நான் இருக்கையில் இருந்து எழுந்து ஒரு அடி எடுத்து வைத்தால் என் அம்மாவை தொட்டு விடலாம்.லேசாக அவளுக்கு தலை கோதலாம், நெற்றியை நீவி விட்டு ஈரமில்லாத ஒரு முத்தம் தரலாம், வெடித்திருக்கும் அந்த பாதங்களை பிடித்து விடலாம், நரம்புகள் தளர்ந்து ஓடும் அவளின் பச்சை விரல்களுக்கு நெட்டி எடுக்கலாம்,கழுத்தில் கை வைத்து உடல் எவ்வளவு சுடுகிறது என பார்க்கலாம், போர்வையை சரியாக போர்த்தி விடலாம்,ஓரமாய் கசிந்திருக்கும் அந்த ஒற்றை நீர் துளியை துடைத்து விடலாம் .
வறண்ட உதடுகளுக்கு நீர் புகட்டி ஈரமாக்கலாம் , அவள் என்னை கண்டு கண் திறக்கும் போது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த ஆரஞ்சு சுளைகளை உரித்து கொடுக்கலாம், மிதமான சூட்டில் சர்க்கரை போடாமல் ஹார்லிக்ஸ் கலந்து கொடுக்கலாம்,பாலில் ஊற வைத்த இடியாப்ப துணுக்குகளை ஊட்டி விடலாம் , ரெண்டு நாள் தாம்மா வீட்டுக்கு போய்டலாம் என ஆறுதல் பேசலாம் .
அறையில் யாருமே இல்லையே என்னை தவிர , எழலாம் அம்மாவை கவனிப்பதில் கூச்சம் கோர்ந்த நிமிடங்களின் முட்களை நான்காய் எட்டாய் உடைத்தெறிந்து அம்மாவின் உலர்ந்து வெடித்த கால்களை என் உள்ளங்கை சூடு கொடுத்து தேய்த்து விடலாம் , அதோ அவள் வறண்ட உதடுகள் முனுமுனுக்கும் வார்த்தைகளை கூர்ந்து கேட்கலாம் .
அவள் என்னிடம் பேசத் துடிக்கும் கடைசி வார்த்தைகள் அந்த முனகலில் ஏதும் மிச்சம் இருக்கலாம் .
என்ன சொல்ல  போகிறாள் என்னிடம் , நிறைய இருக்கும் அவளுக்குள் அவள் என்னிடம் சொல்வதற்காய், ஹாஸ்பிட்டலில் வேலை முடிந்து வீடு வரும் என் இரவு பொழுது சாப்ட்டியா , மாத்திரை போட்டுட்டியா என விசாரிப்புகளோடும் , பரபரப்பாய் கிளம்பும் அதிகாலை அக்கரையாய் அவளுக்கான மாத்திரைகளை நான் அவளிடம் கொடுத்து செல்வதுமாய் கழியும்.
என்னை டாக்டராய் பார்க்க நினைத்த கனவுக்காய் அவள் உழைத்த உழைப்பு அளவுகோலுக்குள் சிக்காதது, ஒரு கரண்டி நெய் , அரை படி அரிசியில் விருந்து படைக்க தெரிந்த வித்தை கற்றவள், பருப்பு டப்பாக்களை எல்.ஐ.சி பிளான்களாக பாவிக்கும் அவளின் குணமே அடுத்தவரிடம் கையேந்த தேவையற்று அவசரங்களை காப்பாற்றியது.
அளவு இல்லாத அவளின் எனக்கான அன்பு என்னை எப்போதும்  அதிர்ஷ்டசாலியாய் ஆக்கி இருக்கிறது, பயந்து தூங்க தவித்த என் இரவுகள் அவளின் தூக்கம் கடன் வாங்கி தூங்கும்.
பத்தாவது பரீட்சை முடிந்த எனது பள்ளி விடுமுறையை மலேரியாவும்,டைபாய்டும் , மாறி மாறி பகிர்ந்து கொண்ட போது எமனோடு எனக்காய் அவள் போட்ட சண்டை நான் சிவப்பாய் எடுத்த இரத்த வாந்தியோடு இன்னும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது, நான் உடல் தேறியிருந்த போது அவள் உருமாறியிருந்தாள், நான் பொலிவு பெற பெற அவள் தேய்ந்து கொண்டிருந்தாள், நான் படிப்பு முடித்து டாக்டராகியிருந்த போது அம்மா முழுதாய் நோயாளியாகியிருந்தாள்.
முதன் முதலாய் நான் ஸ்டெதஸ்கோப் எடுத்து பச்சை நிற ஸ்பிக்மோமானோமீட்டரின் துணியை அவள் கைகளில் சுற்றி துள்ளி குதிக்கும் மெர்குரி துளிகளில் அவள் இரத்த அழுத்தம் அளந்து சொன்ன போது, நான் உலகத்து நோயாளிகளின் அத்தனை கொடிய நோய்களுக்கும் மருந்து கண்டு பிடித்து மனிதர்களை சாகாவரம் கொடுக்க பிறந்த அதி அற்புதமானவனாய் என்னை பூரித்த பார்வை பார்த்தாள்.
ஐந்தரை ஆண்டுகள் தலையணை அணைய ஐந்து கிலோ புத்தகங்களில் படங்களாகவும், நீண்ட நெடிய விளக்கங்களாகவும் பார்த்த அனாட்டமியையும், பிஸியாலஜியையும், பேத்தாலஜியையும், ஐம்பது கிலோ, எண்பது கிலோ மனித புத்தகங்களில் நான் தேட ஆரம்பித்திருந்த போது என் அம்மாவின் உடலும் நிறைய பாடங்களை கற்பிக்கும் புத்தகமாய் எனக்கு மாறியிருந்தது .
முதுமை நோய்களின் கூடாரமாகி போகும் போது ,எப்படி வெளியேற்றுவது என்ற வித்தை புத்தகங்களுக்கு அப்பால் இருக்கிறது என்ற உண்மை எனக்கு புரிந்திருந்த வேளையில் அம்மாவை கவனிப்பதற்காய் நான் வேலைக்கு அமர்த்தியிருந்த அத்தனை வேலையாட்களும் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
தன் இயலாமை கோபங்களை வெளிக்கொட்டும் வடிகாலாய் யாரும் கிடைக்காத எரிச்சலில் கொப்பளித்து ஆவியாகும் அவளின் கனல் வார்த்தைகள் , என் அம்மாவை மிகப்பெரிய கொடுமைக்காரியாய் நினைக்க வைத்து அவர்களின் தொடர் ஒட்டத்துக்கு காரணமாகியது.
ஈக்களும் , எறும்புகளும், எனை நெருங்க விடாமல் என் குழந்தை பருவத்தை நகர்த்தியவளும், என் பசியை எனக்கு முன்னமே உணர் திரன் கொண்டவளுமான , எனக்காய் யாரிடமும் சண்டையிட தயாரானவளாயிருந்த , சுகங்களின் சுகந்தத்தை மட்டுமே எனக்கு வாரி வாரி வழங்கி கொண்டிருந்த அம்மா என் அன்றாடங்களின் மிகப்பெரிய சுமையாகி போனாள்.
என் அம்மாவை கவனிப்பதில் நான் அத்தனை அக்கறை கொண்டவனாயிருந்த போதும் , நோய்களும் அவளிடம் அதிகமாய் அக்கறை கொண்டிருந்தன. சிறுநீரகம், நுரையீரல்,இதயம் என முக்கியமான அவளின் செயல்பாடுகள் மருந்து மாத்திரைகளை மட்டுமே நம்பியிருந்தது.
நான் கொடுக்கும் மருந்துகள் எத்தனை அழகாய் வேலை செய்கிறது,எத்தனை பிரச்சினை தருகிறது என்ற பார்மகாலஜியை அவளின் உடல் நலமும், கடும் பிணியும் தினம் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தது.

திங்கள் முதல் ஞாயிறு வரை , காலை , மதியம் ,மாலை இரவு என அவளுக்கான மாத்திரைகளை நான் பிரித்து வைக்கும் விதம் , சிறு வயதில் அம்மாவுக்கு தெரியாமல் விளையாடின பல்லாங்குழியை ஞாபகப்படுத்தும்.
வீட்டு வாசலில் என் அம்மாவே நட்டு வளர்த்த மாமரமும், வேம்பும் தழையாட்டி வீசும் காற்றின் ஆக்சிஜனை உள்ளுறிஞ்ச முடியாத அவளின் நுரையீரல்கள் அவள் இரத்தத்தின் கார்பன் டை ஆக்சைடின் அளவை அதிகப்படுத்தியிருந்தன.
மூச்சுத்திணறலில் அவள் உதடுகள் ஊதாவாகிப்போனபோது எங்கள் மாமரமும், வேம்பும் அவளுக்காய் வேகமாய் அசைந்து கொடுத்த அத்தனை காற்றிலிருந்தும் அவள் நுரையீரல் துளி கூட எடுத்துக்கொள்ள மறுத்திருந்தது பத்து நாட்கள் முன்பு.
பத்து நாட்களாய் அம்மா வென்ட்டிலேட்டரில், அவளுக்காக வென்ட்டிலேட்டர் சுவாசித்துக்கொண்டிருந்தது. தொண்டையில் பள்ளம் பறித்து , பிளாஸ்டிக் குழாய் செருகி மூச்சு அளந்து அளந்து போய்க்கொண்டிருந்தது.
நாளைக்கு எழுபத்தைந்தாயிரம் பிடுங்கும் ஐ.எம்.சி.யு , வெளியேறின யூரினை எட்டு வேலை அளக்கும் நர்சுகள், எடுத்துக்கொண்ட ஆக்சிஜனை இரத்தத்தில் தேடும் விரலில் தொப்பியாய் குடியிருக்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர்கள்,  முத்து முத்தாய் சொட்டும் ரிங்கர் லாக்டேட் பாட்டில்களில் , மஞ்சள் , வெள்ளையாய் குத்தப்படும் ஆண்டிபயாடிக் , ஆண்டிகொயாகுலண்ட் இன்ஜெக்சன்கள்.
தொண்டைக்குழியில் இரண்டு விரல் பள்ளம் பறித்து உள் நுழைக்கப்பட்ட டிரக்யாஸ்ட்டமியின் மூச்சுக்குழாய்கள், தேடி எடுக்க தேவையற்று தெளிவாய் கிடைத்த பச்சை நரம்புகளில் குத்தப்பட்ட வென்ப்லான்கள், என்னை சுகமாய் பிரசவித்த கருவாயில் யூரின் வழிய சொருகப்பட்ட கதீட்டர் டுயூப்கள் , தொடையின் சூட்டோடு நெருக்கமாய் வைக்கப்பட்ட பெட்பேன் , அம்மாவின் அத்தனை இயற்கை வழிப்பாதைகளும் அடைக்கப்பட்டு அவள் உயிர் வாழ்வதற்கு போராடுகிறாளா , சாவதற்கு போராடுகிறாளா என புரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.
தொடர் தேவையாயிருந்த வென்டிலேட்டர் சுவாசமே புரிய வைத்து விட்டது, அம்மா இனி மாவும் , வேம்பும் துளிர்க்கும் தருணங்களின் மகரந்த வாசனையை மட்டுமல்ல அவை மஞ்சள் மாலையின் ஈரக்காற்றுக்கு  நெளிந்து கொடுக்கும் காற்றை கூட அவளால் சுவாசிக்க முடியாது என்பதை.
அம்மாவை நான் எத்தனை நாள் வேண்டுமானலும் உயிரோடு வைத்துக்கொண்டிருக்கலாம் ஐ.எம்.சி.யு வின் வென்டிலேட்டர் நெருக்கத்தில் , பவுடர் திட்டுக்களோடு வேலைக்கு வரும் மூன்று ஷிப்டு நர்சுகளின் தூங்காத கண்களில் , சலைன் பாட்டில்களின் சோடியம் ,மெக்னீஸியத்தில், அம்மாவை நான் உயிரோடு மட்டும் வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அம்மாக்கள் வயதானவுடன் அன்றாடங்களின் மிகப்பெரிய சுமையாகிவிடுகிறார்கள்.
வாழும் போது இருக்கும் அதே கௌரவம் , சாவிலும் இருக்க வேண்டும் சம் டிகினிட்டி இன் டெத் என அம்மா படிக்க வைத்த டாக்டர் படிப்பறிவு மனதில் விதை போட்டது ஆமாம் வலியில்லாத சாவு வரம் தான்,
உடலின் ஓட்டைகளில் ஈக்கள் மொய்த்து , புழுக்களின் நெளிவுக்கு இடம் கொடுக்காமல் எனக்கு பால் கொடுத்த மார்புகளும் ,தூங்க வைத்த தோள்களும், கதை சொன்ன உதடுகளும், வலியின்றி பிரிந்து போவது நல்லது .
ஐ.எம்.சி.யுவில் இருந்து நார்மல் வார்டுக்கு வந்து இரண்டு மனி நேரம் ஆகி விட்டது, பத்து நாட்கள் அவளை சுற்றியிருந்த அத்தனை ஒயர்களிடம் இருந்தும் விடுதலை, எண்பது வருடங்கள் சிக்கியிருந்த அத்தனை பந்தங்களில் இருந்தும்.


என் அம்மாவின் பிரிந்து மூடும் உதடுகள் ‘உனக்கு இப்படியொரு நிலையிருந்திருந்தால்  நான் என்ன செய்வேன் யோசி’ என்பதாய் எனக்கு பட்டது , எனக்காய் பரிந்து யாரிடமும் எப்போதும் சண்டை போட தயாராய் இருந்தவளுக்காய் நான் மௌனத்தை ஆயுதாமாக்கி சிவப்பு குஷன் சேரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறேன் . அவள் வழி தெரியாத பயணத்துக்கு காத்துக்கொண்டிருக்கிறாள்.

- சக்கரவர்த்தி 
அமுதசுரபியில் வெளிவந்த எனது சிறுகதை ..
 நன்றி திருப்பூர் கிருஷ்ணன் சார் 


Friday, December 31, 2010

அறிவியல் காதலி


இதயம் துடிப்பது உன்னால் என்றேன் ..
Cardiac muscle contraction  என்றாய் !

நுரையீரல் சுவாசம் நீயே என்றேன்
ALVEOLI  நடத்தும் வாயு பரிமாற்றம் என்றாய் !

விழியின் பார்வை நீயடி என்றேன்
VISUAL AREA-வின்  விளையாட்டு   என்றாய் 

கேட்கும்   திறனும் நீயே என்றேன்
AUDITORY AREA - வின் ஆர்டர் என்றாய் !

எந்தன் தோலின் தொடு உணர்வு தேவியின் நினைவே என்றேன்
SOMATO SENSORY AREA STIMULATION என்றாய் !

உறுப்புகள் இயக்கம் உன்னசைவால் என்றேன்
SKELETAL MUSCLES-ன்  அசைவே என்றாய் !

உள்ளோடும் உதிரம்  உந்தன் அன்பு என்றேன்
PLASMA , WBC , RBC , PLATELETS சேர்ந்த கலவை என்றாய் !

உண்ணும் உணவின் ருசி உந்தன் விரலின் சுவையே என்றேன்
GLUCOSE , PROTEIN , LIPID , MINERAL -ன் சேர்க்கை என்றாய் !

என்னில் நிகழும் மாற்றங்கள் எல்லாம் உன் ஓர விழியால் என்றேன்
ENDOCRINE GLANDS -ன் எக்கு தப்பான வேலை என்றாய் !

நான் ஆண்மை கொண்டது உன்னால் என்றேன்
ANDROGEN , TESTROGEN சேவை என்றாய் !

என் நினைவுகள் யாவும் நீயே என்றேன்
அதற்கு காரணமே BRAIN தான் என்றாய் !

அறிவியல் கற்ற உனக்கு
அடியேனின் கற்பனைகள்
அற்பமாய் தோன்றினாலும்
அழிக்க முடியாது
என்னில் உன்னை ..
என் ஆயுள் இருக்கும் வரை ..
 

Saturday, November 13, 2010

சிவப்பு பாம்பும் .. வெற்றிலை பாக்கும்



வெள்ளை நிற பனியனில்
வெற்றிலை பாக்கு எச்சில்
விட்டு விட்டு துப்பியது போல்
சட்டை அணிந்த அவனும் ...
சிவப்பு பாம்புகளாய்
சின்ன சின்ன கோடுகளால் நிறைந்த
மலை மேல் மூடிய துணியாய்
மார்பிரண்டின் அழகு காட்டும்
மஞ்சள் நிற சுடிதார் அணிந்த அவளும் ...
கருப்பு மேகங்கள்
வெள்ளை மழை பொலியும்
மஞ்சள் மாலையில்
செம்மண் சாலையில்
எதிரெதிராய் நடந்து வந்தனர் ..!!!

வா தாத்தா




உன் உடல்
வேக நடையில்
வெள்ளி வியர்வையில்
குளித்த உடம்பு தானே தாத்தா ..
சிலம்பு சண்டையில்
சுற்றும் சிலம்பின்
சூட்டில் பட்ட காயங்கள் கொண்ட உடம்பு தானே தாத்தா..
மூக்கு கயிறு அறுந்த மாட்டை
முன் நின்று அடக்கி
கூர் கொம்பு கிழித்த
காயம் காட்டுவாயே அந்த உடம்பு தானே தாத்தா..
ஆயா'வை பெண் பார்த்து வந்து
தெரியாமல் அவளை பார்க்க போய்
சுவற்றில் அவள் உடல் சாய்த்து
கழுத்தில் உன் இதழ் தோய்த்து
அவள் விலக , நீ இழுக்க
மேலிருந்த பூனை
பயந்து உன் மீள் விழுந்து
கீறிய தழும்பு காட்டினாயே எங்கே தாத்தா அது ....
ஏன் இப்படி ஏதும் பேசாமல் இருக்கிறாய் ..!!!
நான் யானை ஏறி உதைத்த போது
அசையாத உன் தோள்கள்
ஏன் இப்போது சாய்ந்து கிடக்கிறது ..???
வா தாத்தா
அப்பா
அம்மா
ஆயா
எல்லோரும் அழுகிறார்கள் பார்
எழுந்து வா தாத்தா .....!!!


Friday, November 12, 2010

கொஞ்சம் அலங்காரம் போடு .


அலைகின்ற மேகங்கள்
அவள் கூந்தல் நிலையென்று அழகாக நான் சொன்னேன் ..
தலை தேய்த்து குளித்ததோ தரமான ஷாம்பென்று
தயங்காது நீ சொன்னாய் ...!!!
வானத்து நிலவொளிதான் வந்திறங்கிய
வடிவுந்தன் முகமென்று வர்ணித்து நான் சொன்னேன் ...
என் முக பொலிவுக்கு இதுவன்றோ
எனவென்று ட்யூப்க்குள் பூட்டி வைத்த திரவத்தை காட்டினாய் ...!!!
அதர சிவப்புக்கு அத்தி பழம் நிகரில்லை
அடித்து நான் சொன்னேன் ..
வண்ண பொருள் ஒன்றே
வனப்புக்கு காரணமாய் அமைந்த கதை நீ சொன்னாய் ...!!!
செம்மேனி அழகோடு சேர்ந்திருக்கும் மனம் கண்டு
எந்த மலர் இதுவென்று
ஏதும் புரியாது நான் இருந்தேன் ..
வெளிநாட்டு திரவம் இது வெளிகொணரும் மனம் இதுவென்று
வேடிக்கை பதில் சொன்னாய் ...!!!
அலங்காரம் , அரிதாரம்
அழகென்ற அகங்காரம்
மேனி வனப்புக்கு செலவுகளோ ஆயிரமாயிரம் ...
ஊரார் புகழ் பேச .. புறம் பூசும் ...
உன் அலங்காரம் போதும்
ஊரார் உன் அகம் பேச ..
கொஞ்சம் அலங்காரம் போடு ...

எப்போது நீ வருவாய்


நான் அணிந்த பட்டுசேலை
நீ ஆடும் தூளியாக மாறும் ...
என் உடல் உதிரங்கள்
உனக்கான உணவாய் மாறும் ..
என் கையின் வளை ஒலிகள்
உன் செவிக்கு இசை சாரல் தூறும் ..
வானத்து வெண்ணிலவு
உன் இரவு உணவுக்கு துணையாக வந்து சேரும் ...
என் இதழ் ஈரங்கள்
உன் கன்னத்தில் ஊறும் ...
பொழுதெலாம் நீ சிரிக்க
உன் சிரிப்பில் உலகம் நான் மறக்க
எப்போது என் வயிற்றில் கரு வந்து சேரும் ...

அழுக்காய் அழகாய்


அப்படி என்னவொரு ஆசையோ தெரியவில்லை
அம்மணமாய் திரிவதில் ..
அழகான சட்டை போட்டு
அலங்காரம் செய்துவித்து
அனுப்புவாள் அம்மா
வீதிக்கு விளையாட ...
தெரு மண்ணில் உடை புரட்டி
உடல் எங்கும் மணல் புரட்டி
உடுத்தியிருந்த உடை அவிழ்த்து
வீடு நான் திரும்புகையில் ...
கோபம் கொண்டு
அம்மா
அடித்தாலும் , திட்டினாலும்
அவள் ஆடை அணிவிக்கவும் ,
அலங்காரம் செய்யவும் தவறுவதில்லை ...
நான்
ஆடை அவிழ்த்து அழுக்கில் புரட்டாமல் விடுவதில்லை ...

Thursday, November 11, 2010

எனக்காய் பூமியில் வந்த சாமியம்மா நீ


எனக்காய் பூமியில் வந்த சாமியம்மா நீ
சுயமாய் ஒரு உரு தந்தாய்
சுவாசம் கற்று தந்தாய்
உள்ளோடும் உதிரத்தில் கலந்திருந்தாய்
தள்ளாட்ட நடையில் என்னை தளுவியிருந்தாய்
அழாமல் ஆகாரம் தந்தாய்
அழும் முன்னே ஆறுதல் தந்தாய்
என் சுமைகள் இறக்கி வைத்து
உன் சுமைகள் ஏற்றி கொண்டாய்
என்னை சிரிக்க வைக்க உன் சிரிப்பு மறந்து
என்னை உறங்க வைக்க உன் உறக்கம் மறந்து
எனக்காகவே பூமியில் வந்த சாமியம்மா நீ ..

Monday, September 13, 2010

கணக்கு பாடம்

கணக்கு பாடம் நன்றாக தான் இருந்தது,

அப்பா நான் கணக்கில் நூற்றுக்கு நூறு என பெருமையாக சொல்லிக்கொள்ள ஆசைபட்ட்டார்

டீச்சர் கணக்கில் தான் மிக சுலபமாக நூறு எடுக்க முடியும் என சொன்னார்,

டியூஷன் வைக்க சொன்னார்கள்

இரவுகளில் படிக்கச் சொன்னார்கள்

என் அப்பாவும் என்னோடு கண் விழித்தார்

எத்தனை ரப் நோட்கள்

எத்தனை வெள்ளை தாள்கள்

எத்தனை இரவுகள்
லிப்டன் டீ தூள் கால் கிலோ காலியானது
எலெக்ட்ரிக் பில் 250 ருபாய் அதிகமானது
அந்த வெயில் கால காலை பத்து மணி
நான் நூற்றுக்கு நூறு கணக்கில் வாங்குவதற்காக பிரத்யேகமாக வந்தது எழுதினேன் .. வாங்கினேன் .....
ஆனால் இன்னும் எனக்கு புரியவில்லைநான் படித்த [a+b ] 2 க்குஎன அர்த்தம் ?

Monday, February 16, 2009

வெட்கம்
அறியாத வயதில்
நான் போட்ட ஆட்டம்..
அம்மா சொனதும்
கன்னத்தில் வெட்கம் ..
நாட்காட்டி லேசாகும் நேரத்தில்
மனது கனமாகிறது
உன்னை பிரிந்து
ஓடி விட்டது
ஒரு வருடம் ...!
சாலையில் செல்லும்
ஆண்களை அழைத்து
மனைவிக்கு பூ வாங்கிச் செல்ல சொல்வாள்
அந்த பூக்காரி ...
பூக்கள் எல்லாம்
விற்று தீர்ந்த பின்
எண்ணிக் கொள்வாள்
தன் கணவன்
எந்த பூக்காரியிடம்
பூ வாங்கி வருவான் என ...!

Sunday, September 7, 2008

கருவாட்டு குழம்பு

குளம் வறண்டு போக
குட்டை என்று ஆக
வசித்து வந்த
மீன்கள் வத்தல் ஆகிப் போக
மீன் குழம்பு இல்லையென்று
நான் அழுதேன் !

கருவாட்டு குழம்பு
வைத்து
கண்ணிரை துடைத்தாள்
என் அம்மா...!



Monday, August 11, 2008

குரலில்லாமல் தவிக்கும்
ஊமைகளுக்கு
உன் குரலை கொடுத்துவிடலாம் ! !
உடல் மொழி
விழி மொழி
இதழ் மொழியென
எத்தனை மொழிதான்
ஒருத்தி பேசுவது ...

கொதிக்கும் எண்ணெய் சட்டியில்
கடலை மாவில் தோய்த்த
வாழைக்காய்கள்
நனையும்போது
எழும் வாசனைக்கு
சட்டைப்பை
சில்லறையை
தடவும் விரல்கள் ....

Sunday, August 3, 2008

மரப்பலகையில் அமர்ந்து
தினசரி படித்தவாறு
சாலையில் விரையும்
வாகனங்களை வெறித்தவாறு
கண்ணாடிதம்ளர்களில்
தேநீர் உறிஞ்சிக் குடிப்பது
ஆண்களுக்கு மட்டுமென
வரம் தந்தது யார் ... !

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...